குரு கவசம்
தென் திசை நோக்கிய தெய்வம் நீயே
தென்னாடுடைய சிவனும் நீயே
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே
சந்திரன் தலையில் சூடிய குருவே
சாந்த சொரூபம் உந்தன் வடிவே
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்
நல்லோன் நீயே நலம் தருவாயே
புன்னகை தவழும் பொன்னன் நீயே
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே
கண்ணிமை போலே காப்பவன் நீயே
கை தொழுதோமே குருவே சரணம்
உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்
ஈரேழ் உலகம் உன்புகழ் பாடும்
சிவனுருவான குருபகவானே
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே
புகழும் நிதியும் தருபவன் நீயே
தாராதேவி சங்கினி என்று
தேவியர் இருவரை மணந்தவன் நீயே
மாறா கருணை கொண்டவன் நீயே
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே
தனுசு மீனம் ராசிகள் இரண்டின்
அதிபதி நீயே அருள்புரிவோனே
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து
கடலென செல்வம் அடைந்திடுவோமே
முல்லை மலரால் உன்னை வணங்கி
முந்தை வினைகளின் வேரருப்போமே
இல்லையென்று சொல்லாமல் நீயும்
எங்களுக்கருளும் ஈசனும் நீயே
வியாழன் தோறும் விரதம் இருந்து
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்
தியானநிலையில் இருக்கும் உந்தன்
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்
திருமணம் நிகழ திருவருள் புரிவாய்
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்
வருக வருக குருவே வருக
வழிபடுவோர்க்கு நலம்பல தருக
சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே
சரணடைந்தோர்க்கு காவல் நீயே
போற்றிட வந்தோம் உன் திருவடியே
புரிவாய் புரிவாய் கருணை குருவே
தேவர்கள் வணங்கும் குருவும் நீயே
இந்திரலோக மந்திரி நீயே
பாவங்கள் போக்கும் பகவான் நீயே
பக்தரை காக்கும் ஈசனும் நீயே
கருணை உள்ளம் கொண்டவன் நீயே
மங்களம் அருளும் கோலும் நீயே
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்
இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே
பஞ்சபூதத்தில் வானம் நீயே
அழிவில்லாத ஆண்டவன் நீயே
அடைக்களமானோம் உன் திருவடியே
அன்பரை காக்கும் அழகிய இறைவா
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே
துணைவரவேண்டும் நிழலென நீயே
தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்
வாரம்தோறும் வழிபடும்போது
நேரிடும் இன்னல் நெருங்குவதேது
அரச மரத்தை வளம் வரும் வேளை
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்
கொண்டைக் கடலை உனக்கென படைத்து
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்
பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்
தயிரும் இளநீர் விபூதியாலும்
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்
எல்லா இடரும் நொடியில் விலகும்
பக்தரை உந்தன் பாதம் காக்க
பணிந்தோம் உன்னை குருவே காக்க
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க
திருவடி தொழுதோம் என்றும் காக்க
காக்க காக்க கயிலாயன் காக்க
கருணாமூர்த்தி கனிந்தே காக்க
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க
இமைகள் இரண்டை இமையோன் காக்க
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க
தாழ்பணிந்தோமே குருவே காக்க
இருள்தனை அகற்றும் ஒளியென காக்க
இரு கைகால்களை இறையோன் காக்க
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க
உள்ளே உறையும் குருவே காக்க
பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க
பழியில் இருந்து பகவான் காக்க
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க
சீலமாய் வாழ குருவே காக்க
பிணிகள் இன்றி பெரியோன் காக்க
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க
இணையில்லாத குருவே காக்க
விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க
திருப்பம் வழங்கும் திருவே காக்க
திசைகள் எட்டும் குருவே காக்க
தனித்தனியாக உறுப்புகள் யாவும்
தடைகள் இன்றி இயங்கிட காக்க
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க
நெஞ்சினில் வாழும் குருவே காக்க
காக்கும் எங்கள் குருவே வாழ்க
கயிலைமலையோன் சிவனே வாழ்க
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க
தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க
பொன்னிறத்தோனே தேவா வாழ்க
பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க
புதுப்புனலாக கருணை வாழ்க
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க
யாவரும் வணங்கும் குருவே வாழ்க
ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க
வரும்வினை போக்கும் குருவே வாழ்க
ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி
போதனைசாலையில் இருப்பாய் போற்றி
புண்ணியவடிவே குருவே போற்றி
ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்
அய்யா நீயும் வாசம் செய்வாய்
மருத்துவமனையில் வங்கியில் நீயும்
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்
மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்
ஒவ்வொருத்துளையும் கோல்யெனவாகும்
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்
மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே
வாயில் உன்னை வைத்ததனாலே
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே
முன்வழித் துளையில் ராகு இருக்க
பின்வழித் துளையில் கேது இருக்க
அங்கம் முழுதும் நவகோலாக
எங்களை மண்ணில் படைத்தவன் நீயே
தலங்கள் தோறும் விதவிதமான
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்
வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து
கைத்தொழுவோரை காத்திடுவாயே
திருவொற்றியூரில் வடதிசை பார்த்து
திருவருள் நீயும் புரிகின்றாயே
திருநாவலூரில் நின்ற நிலையிலே
தரிசனம் தந்து அருள்கின்றாயே
காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே
திருப்புலிவலத்தில் சிங்கத்தின் மீது
திருவடிப் பதித்து வீற்றிருப்பாயே
திருச்செங்கோட்டில் இடக்கால் ஊன்றி
வலக்கால் மடக்கி அருள்புரிவாயே
தஞ்சை கோபுர கீழ்சுவர் தன்னில்
வெண்ணிற தாடி விளங்கிட இருப்பாய்
மான்தோல் மீது காலை மடித்து
யோக நிலையிலே நீயிருப்பாயே
மயிலாடுதுறையில் நந்தியின் மீது
அமர்ந்த நிலையிலே தரிசனம் தருவாய்
திருவிடைமருதூர் ஆலயம் தன்னில்
உமையவளுடனே அருள்புரிவாயே
திருவையாற்றில் உன்திருவடியில்
ஆமை இருக்க அதிசயம் கண்டோம்
வலக்கரம் தனிலே கபாலம் ஏந்தி
தரிசனம் வழங்க ஆனந்தம் கொண்டோம்
சங்கரங்கோயில் ஆலயம் தனிலே
மிருதங்கம் ஏந்திய நிலையினில் கண்டோம்
அகரம் தலத்தில் கங்கையை சிரசில்
ஏந்திய தோற்றம் புண்ணியம் என்போம்
கயிலையில் ஒருநாள் உமையுடன் நீயும்
களிப்புடன் இருக்கும் வேளையின்போது
அன்னப்பறவை இடையினில் பறந்து
சினம்வரும்படியாய் செய்தது உன்னை
அரமன் உந்தன் கோபத்தினாலே
அன்னப்பறவை மண்ணில் பிறந்து
அன்னதான தக்ஷிணாமூர்த்தியின்
திருவருளாலே குறை நீங்கியதே
குருவின் பார்வை தரும் பல நன்மை
அடியவர் வாழ்வில் இதுவே உணமை
குருவே உந்தன் மனமோ மென்மை
உனக்கொரு ஈடு இணையே இல்லை
தொழிலும் கலையும் தழைத்தே வளர
தொழுதிடுவோமே குரு பகவானே
அழிவில்லாத அருளைத் தந்து
அகிலம் த்ன்னை காப்பவன் நீயே
ஆலங்குடியில் அருளும் குருவே
ஆறு கால அபிஷேகம் உனக்கு
மீனாக்ஷியம்மன் ஆலயம் தனிலே
சங்குடன் சக்கரம் தரித்து நின்றாயே
குச்சனூர் தனிலே யானையில் அமர்ந்த
ராஜயோக மூர்த்தியும் நீயே
மெச்சிடும்படியாய் பல்வேறு வடிவில்
மேதினி வியக்க அருள்கின்றாயே
தைப்பூச நாளில் உந்தனை பணிந்தால்
தடை பல விலகும் நினைத்தது பலிக்கும்
வையகம் செழிக்க வரம் தருவோனே
வண்ங்கிடுவோமே உனையே குருவே
நெய்தீபமேற்றி கும்பிட எங்கள்
நெஞ்சம் மகிழும் பஞ்சம் அகலும்
ஐயம் தீர்க்கும் ஆசான் நீயே
அன்பரை என்றும் காத்திடு குருவே
அல்லிமலரால் உன்னை பணிவோம்
செல்வம் பெருகிட அருளிட வேண்டும்
வாடாமல்லி பூவால் உன்னை
வணங்கிட எமபயம் நீக்கிடுவாயே
மல்லிகைப்பூவால் வணங்கிடும் போது
மனதில் அமைதி வழங்கிடு குருவே
சம்பங்கி பூவால் உன்னை தொழுதால்
இருப்பிடம் மாற்றி நீயருள்வாயே
காசாம்பூவால் கழலடி வணங்க
அற்புதம் நிகழும் அகமே மகிழும்
ஆவாரம்பூவால் குரு உனை பணிந்தால்
நினைவின் ஆற்றல் நித்தம் பெருகும்
நாகலிங்கப்பூவால் உன்னை
நாளும் நாளும் பூஜிப்போமே
லக்ஷ்மி கடாட்சம் உடல்நலம் தந்து
எங்களை நீயும் உயரவைப்பாயே
எத்தனை பூவால் பணிந்தால் என்ன
உந்தன் பெருமையை நானென்ன சொல்ல
சித்தம் முழுதும் நித்தம் பூக்கும்
அன்பு ஒன்றே உன் வசமாகும்
ஞான தக்ஷிணாமூர்த்தி போற்றி
யோக தக்ஷிணாமூர்த்தி போற்றி
வீணா தக்ஷிணாமூர்த்தி போற்றி
கெளரி தக்ஷிணாமூர்த்தி போற்றி
ஆதி தக்ஷிணாமூர்த்தி போற்றி
அருளும் தக்ஷிணாமூர்த்தி போற்றி
ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி போற்றி
சிவசிவ தக்ஷிணாமூர்த்தி போற்றி
சரணம் சரணம் குருவே சரணம்
கவசம் போலே காப்பாய் சரணம்
அருள்மழை நீயே அய்யா சரணம்
அபயம் அபயம் தருவாய் சரணம்

Comments
Post a Comment