ஸ்ரீ காலபைரவர் கவசம் | Kala Bhairavar Kavasam

ஸ்ரீ காலபைரவர் கவசம்



சிவனது வடிவாய் உதித்தவன் நீயே
ஜகத்தையாளும் பைரவர் நீயே
உனதருளாலே உலகம் உய்யும்
உதவிடும் நீயோர் உன்னத தெய்வம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி
திதியில் உனக்கு சிறப்புடன் பூஜை
வேண்டும் வரங்களைத் தருபவன் நீயே
வேதனை நீக்கும் பைரவர் நீயே

கல்விக்கடவுள் தக்ஷிணாமூர்த்தி
கழிநடம் புரியும் அம்பலவாணன்
காவல் தெய்வம் நீயே என்று
கைதொழுதோமே உன்னை இன்று

அச்சம் போக்கும் அதிபதி நீயே
ஆணவமழிக்க நீ உதித்தாயே
நிச்சயம் உன்னைப் பணிந்தவர்க்கெல்லாம்
நினைத்தது நடக்கும் நேர்வழி பிறக்கும்

எதிரிகள் தம்மை பதறிட வைக்கும்
ஈசனும் நீயே எமக்கருள்வாயே
கதியென உன்னை சரணடைந்தோரை
காத்திட வேண்டும் வைரவநாதா

அருள்மிகு சிவனின் ஆலயம் தோறும்
வடகிழக்கு மூலையில் சன்னதி உனக்கு
திருவருள் வேண்டி வருபவர்க்கெல்லாம்
கருணை செய்வாய் என்பது வழக்கு

நீலநிறத்தில் மேனியைக்கொண்டு
நிர்மலனாக நீயிருப்பாயே
முக்கண்ணுடைய செஞ்சடையோனே
முன்வினையாவும் தீர்த்து வைப்போனே

காதில் குண்டலம் தலைகள் மாலையும்
கடகம் சூலம் உடுக்கை கபாலம்
எல்லாம் தாங்கி எங்களைக் காக்கும்
ஈசன் வடிவே எங்கள் துணையே

அன்றொருநாளில் பிரம்மன் தனது
படைப்புத் தொழிலில் ஆணவம் கொண்டான்
சிவனைவிடவும் பெரியவன் நானே
என்றே முழங்கி அறிவிழந்தானே

கர்வம் கொண்ட பிரம்மனை அடக்க
கயிலைநாதன் முடிவெடுத்தானே
நெற்றிப்புருவம் நடுவினிலிருந்து
பைரவர் உன்னை உதிக்க செய்தானே

பரமன் சொன்ன ஆணைப்படியே
பிரம்மன் அருகில் சென்றாய் நீயே
தலைகள் ஐந்தை தாங்கிய அவனின்
ஒருதலை கீழே நீயெறிந்தாயே

அகந்தை நெஞ்சில் மிகுந்தவர்க்கெல்லாம்
அதுஒரு பாடம் இது நிஜமாகும்
தவறுகள் செய்வது யாரென்றாலும்
தண்டனைத் தருவது உன்பணியாகும்

நல்லவர்க்கெல்லாம் காவலன் நீயே
நம்பிடுவோர்க்கு நாயகன் நீயே
வல்லமையான பைரவர் நீயே
வணங்கிடுவோமே பக்தியினாலே

செல்வம் வாழ்வில் குவிந்திட செய்யும்
சிவனது உருவே ஜகம் புகழ் திருவே
அல்லன நீக்கி நல்லனக் கூட்டும்
கால பைரவா சூலதாரியே

உச்சந்தலையை உன்னருள் காக்க
உதடுகள் இரண்டை நீயே காக்க
கண்கள் இரண்டை கனிவாய் காக்க
செவிகள் தம்மை சிறப்பாய் காக்க

கன்னம் இரண்டை கருத்தாய் காக்க
கழுத்தும் தோளும் நீயே காக்க
எண்ணம் புரளும் இதயம் காக்க
என்றும் எங்களை நீயே காக்க

இருகைகால்களை இதமாய் காக்க
பாதமிரண்டை பதமாய் காக்க
நரம்புடன் சதையை நயமாய் காக்க
நாடினோம் உன்னை என்றும் காக்க

அணுவினுக்கணுவாய் இருப்பவன் நீயே
அகிலம் தன்னை காப்பவன் நீயே
மனிதனைக் காக்கும் மகத்துவன் நீயே 
மலரடிப்பணிந்தோம் மகிழ்ந்தே காக்க

உறுப்புகள் தோறும் உன்னருள் இருக்க
ஒருபிணிகூட அணுகிட வருமோ
பொறுப்புடன் நீயும் எங்களை காக்க
போற்றிடுவோமே உன்திருவடியே

ஆலயம் தன்னை உன்னருளாலே
காவல் செய்யும் கடவுளும் நீயே
ஆதலினாலே க்ஷத்திரபாலக
ரென்றொரு பெயரை நீ பெற்றாயே

பைரவமூர்த்தி பற்பல உண்டு
கால பைரவர் அதிலே ஒன்று
காசியில் என்றும் நீயே முதன்மை
கவலைகள் தீர்ப்பாய் இதுவே உண்மை

காசிக்கயிறை கையில் அணிந்தால்
கஷ்டங்கள் தீரும் நன்மைகள் சேரும்
ஈசன் வடிவே எங்களை காக்க
இதயம் கனிவாய் எமக்கருள் புரிவாய்

சூரியன் மகனாம் சனீஸ்வரன் தன்
அண்ணன் எமதர்மராஜன் போக்கால்
அலட்சியமாகி கௌரவம் குறைந்து
கவலை அடைந்தான் கலங்கிடலானான்

அன்னை சாயாதேவி உடனே
உன்னை வணங்கிட அறிவுரை சொன்னாய்
உன்னருளாலே கிரஹங்களில் ஒன்றாய்
பதவியும் பெற்று உயர்ந்திடலானான்

அதனால் உன்னை சனீஸ்வர பகவான்
உருவாய்க் கொண்டு திருவடி பணிந்தான்
உள்ளம் உருகி உன்னடி வணங்க
ஊழ்வினையகலும் உயர்வுகள் சேரும்

திருஷ்டி தோஷம் வைத்து அகலும்
பில்லி சூனியம் அச்சம் விலகும்
அமாவாசை நாளில் பூஜைகள் செய்ய
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் கூடும்

குழந்தைப்பேறு இல்லாதவர்க்கும்
கொடுப்பாய் நீயே திருவருள் தானே
செந்நிற அரளி மலர்களினாலே
அர்ச்சனை செய்தால் பலன் தருவாயே

சிறிதளவாக மிளகினை எடுத்து
அகலிடை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய
இழந்தவையெல்லாம் கைவந்து சேரும்

வழக்குகள் தன்னில் வெற்றியைக் காண
அமாவாசைதோறும் அன்னதானமிடனும்
தேங்காய் சாதம் தேனென வைத்து
பைரவர் உனக்கு படைத்தால் நன்மை

தொழிலில் லாபம் வழக்கினில் வெற்றி
தொடர்ந்தே கிடைக்கும் துன்பத்தை உடைக்கும்
அருவியைப் போலே அருள்தரும் அரசே

திருமணமாகா கன்னியும் காளையும்
ஞாயிறுதோறும் உன்னடி பணிவார்
ராகு காலத்தில் ருத்ராபிஷேகம்
விபூதி அபிஷேகம் செய்திட வருவர்

நெய்வடை செய்து மாலைத் தொடுத்து
உனக்கே சாற்றி உன்பதம் தொழுவார்
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து
கல்யாண யோகம் கைமீது பெறுவர்

ஒவ்வொரு சனியும் வில்வத்தினாலே
சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால்
கவ்வியத் துன்பம் கலைந்தே போகும்
நல்லவையெல்லாம் நடந்திடலாகும்

சங்கடம் தீர்க்கும் சங்கரன் நீயே
சரணடைந்தோமே உன்திருவடியே
திங்களை சூடிய சிவனும் நீயே
தினம் தினம் உன்னை வணங்கிடுவோமே

பாம்பினையணிந்த பைரவர் நீயே
பாவம் போக்கும் தெய்வம் நீயே
வேண்டும் வரங்கள் தருபவன் நீயே
வெற்றிக்கு உதவும் வேந்தனும் நீயே

அஷ்ட பைரவ மூர்த்தி வருக
ஆனந்த வாழ்வு இனிதே தருக
துஷ்டரை விரட்டும் தூயவன் வருக
தொழுதிடுவோர்க்கு நன்மைகள் தருக

பட்டம் பதவி எத்தனை இருந்தும்
கெட்டவர் பார்வை வீழ்த்திடப் பார்க்கும்
தட்டி கேட்கும் தைரியம் தருவாய்
தக்க சமயத்தில் துணையாய் வருவாய்

குற்றம் குறைகள் யாவும் பொறுத்து
குழந்தையைப் போலே எங்களை காப்பாய்
பற்றுடன் உன்னை பதம் பணிவோமே
பைரவர் உந்தன் அருள் பெறுவோமே

வேதங்கள் நான்கை நாயென மாற்றி
வாகனமாக கொண்டவன் நீயே
பாதம் பணிந்தோம் பரிவினைக் கேட்டோம்
பைரவர் நீயே மனம் கனிவாயே

வயிரவன்பட்டி திருத்தலம் தன்னில்
வரங்களை வாரி வழங்கிடுவோனே
புயலென துன்பம் எதிர்வரும் போது
தடுத்தார்க்கொள்ளும் இறைவன் நீயே

கார்த்திகை மாதம் சஷ்டியில் நடக்கும்
சூரசம்ஹாரம் தனிச் சிறப்பாகும்
அரக்கனைக் கொன்று அமைதியைத் தந்து
அகிலம் காக்கும் ஆண்டவன் நீயே

வடிவுடையம்மன் வளவொளிநாதர்
இணைந்தருள் செய்ய உடனிருப்பாயே
தலத்தின் தீர்த்தம் வடுக தீர்த்தம்
அடியார் வாழ்வில் தருமே மாற்றம்

பங்குனி மாத பெளர்ணமி நாளில்
நீராடி மகிழ்வோர் சிவனிடம் சேர்வார்
சித்திரைத் திங்கள் நட்சத்திரத்தன்று
நீராடும் பெண்கள் மகப்பேறடைவார்

இதுபோல் எமக்கு பலவித நன்மை
புரியும் உனக்கு நன்றியை சொல்வோம்
அதர்மம் அழிக்க வடிவெடுத்தாயே
அருஞ்சுணையாக அருள் கொடுத்தாயே

அசுரர்கள் இழைத்த கொடுமையைக் கண்டு
அஞ்சிடலானார் தேவரும் முனியும்
காசி நகரில் பிரகாதாரணன் னினும்
முனிவர் செய்தார் உருதிரை யாகம்

பைரவ கடவுள் நீயதில் தோன்றி
வருத்தம் தீர அருள் செய்தாயே
பாலகனாக தோன்றியதாலே
வடுகநாதனின் பெயர் பெற்றாயே

அசுரரைக் கொன்று சூலத்தில் அவரின்
உடலைக் கிழித்து குருதியைக் குடித்தாய்
அழிஞ்சில் மரமே தலத்தின் விருக்ஷம்
அதனை பணிந்தால் வருமே சுபிக்ஷம்

சுயம்பாய் நீயும் வந்தாய் என்று
சரித்திரச் சான்று கூறுவதுண்டு
அயர்வில்லாமல் எங்களை காக்கும்
ஐயனின் பாதம் பணிந்திட வந்தோம்

பகைவரை விரட்டும் பைரவர் வருக
பக்தரைக் காக்கும் காவலன் வருக
உலகினை ஆளும் உத்தமன் வருக
உயிரினம் உன்னைப் போற்றிட வருக

இடர் பல நீக்கும் ஈசன் வருக
எளியவர் வணங்கும் நேசன் வருக
சுடர்விழி காட்டும் சுந்தரன் வருக
சுகமுடன் வாழ திருவருள் புரிக

தடைகளை புரட்டும் தலைவன் வருக
தன்னிகரில்லா இறைவன் வருக
மடையெனத் திறந்து மங்களம் தருக
மண்ணுலகெல்லாம் செழிப்புற செய்க

வயிரவப்பட்டி வள்ளல் வருக
வடுகநாதனே வரங்கள் தருக
தயவுடன் எம்மைக் காத்திட வருக
தாரணி செழிக்க அருள்மழை பொழிக

சிவனுருவான வடிவே சரணம்
செந்நிற அரளி அணிவாய் சரணம்
புவனம் காக்கும் பொன்னடி சரணம்
புரிவாய் புரிவாய் அருளே சரணம்

செய்வினையகற்றும் சிவனே சரணம்
செஞ்சடையோனே திருவடி சரணம்
நெய்வடை மாலை அணிந்தாய் சரணம்
நினைத்ததை நடத்தி வைப்பாய் சரணம்

ஆலயக் காவல் புரிவாய் சரணம்
ஆதரவளிக்கும் அரனே சரணம்
உடுக்கை ஏந்திய உருவே சரணம்
உத்தமர்க்கருளும் திருவே சரணம்

சூலம் கையில் தரித்தாய் சரணம்
பிரம்மனின் அகந்தை அழித்தாய் சரணம்
காலம் மூன்றும் கடந்தாய் சரணம்
கைதொழுவோரைக் காப்பாய் சரணம்

சட்டைநாதனே சரணம் சரணம்
சம்ஹார பைரவா சரணம் சரணம்
அஷ்ட ரூபனே சரணம் சரணம்
அஷ்டமி தோன்றலே சரணம் சரணம்

உக்ர பைரவா சரணம் சரணம்
உன்னடி பணிந்தோம் சரணம் சரணம்
மகர குண்டலா சரணம் சரணம்
மங்கலம் தருவாய் சரணம் சரணம்

காசிநாதனே சரணம் சரணம்
கருணாமூர்த்தி சரணம் சரணம்
நிறைவளிப்பவனே சரணம் சரணம்
நின்னருள் வேண்டும் சரணம் சரணம்

Comments