மாருதி கவசம் | Maruti kavasam

மாருதி கவசம்



அருட்கவி கு.செ. இராமசாமி, எம்.ஏ. சிவகங்கை

ஆஞ்சநேயர் சைவ-வைணவ அன்பர்களின் உபாசன மூர்த்தி தமிழில் அவர்மீது தோன்றிய முதல் கவசம் இதுவே ஆகும். அவரை வணங்கி அன்போடு பாராயணம் செய்துவர இது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

விநாயகர் காப்பு

ஜெயமா ருதிகவசம் சிந்தையிலே நின்று
பயனாய் விளைந்து பலிக்க - உயர்கருணைத்
தும்பிக்கை நாதன் துணையே துணையென்று
நம்பிக்கை கூப்புவேன் நான்.

மூலமந்திரம்

ஜெயஜெய மாருதி! ஹரஹர மாருதி!
ஸ்ரீஜெய மாருதி! ஓம் ஜெய மாருதி!
ஓம் ஜெய மாருதி! ஐம் ஜெய மாருதி!
ஐம் ஜெய மாருதி! ஹரீம்ஜெய் மாருதி!
ஹரீம் ஜெய மாருதி! ஸ்ரீம்ஜெய மாருதி!
ஸ்ரீம்ஜெய மாருதி! ஓம்ஜெய மாருதி!
ஓம்ஐம் ஹ்ரீம்ஸ்ரீம் ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரும்பட்
மூலமந் திரத்தில் முன்வரும் மாருதி!
வடவழ குடைய மாருதி! மாருதி!
அடியினை தொழுதேன் ஆதரி! ஆதரி!

அடிமுடி வருணனை

தண்டை கழலொடு சதங்கை கிண்கிணி
கிண்கிண் கிண்எனத் திருவடி பெயர்த்து
வாரிதி தாண்டும் வயிரக் கால்களும்
பூரித்த தொடையும், பொருந்திய இடையும்,
பட்டுடை அரையிம், பன்மணி மார்பும்,
ஒட்டிய வயிறும், ஓங்கிய தோள்களும்
கவ்விய கடகக் கைகள் இரண்டும்,
திவ்விய ஞானம் திகழும் விழிகளும்,
வீசிய திருவால் விம்மித முகமும்,
தேசுடை முடியொடு ஸ்ரீராம் ராம்என -

வருக! தருக!

எங்கிருந் துன்னை எண்ணுவன் ஆயினும்
அங்கெழுந் தருளி அபயம் வரம்தர
வருக, வருக! மாருதி, வருக!
வருக, துளசி மாலையன் வருக
சித்துர நெற்றி ஸ்ரீதரன் வருக!
எந்தை வருக, ஈச்வரன் வருக!
வீமன் குரலில், வீசும் கதையில்,
பூமன் விஜயன் பொன்மணித் தேரில் -
கூடியும், துள்ளிக் குதித்தும், நடனம்
ஆடியும் களித்த அடலோன் வருக!
ஓரிடம் இன்றி யாண்டும் உலாவும்
மாருத தேவன் மைந்தன் உலாவும்
நிலம், நீர், தீ, வளி, நெருப்பும் வயப்படும்
வலமிகு வீர வானரன் வருக!
வாலியைச் சாய்க்கும் வலியோன் வருக!
தாலியைக் காக்கும் தயாளன் வருக!
பூத்த பவழ மல்லிகைப் பொதும்பர்,
காய்த்த வாழைக் கனிவளர் சோலை,
குலைகுலை யாய்ப்பழம் குலுங்கும் அடவி,
அடைஅடை யாய்த்தேன் அளிக்கும் மலைகளில்
தங்கிடும் தேவ சகாயன் வருக!
மங்கல ரூப மகாரதன் வருக!
அஞ்சுனை மகனே! ஆசுரர் எமனே!
சஞ்சிதம் களையும் ரஞ்சித முகனே!
கேசரி சுதனே! க்ரீடகுண் டலனே!
ஈசன்நந் தீசன் இயல்புடைப் பரனே!
எதிரிகள் மந்திரம், யந்திரம், தந்திரம்,
அதிரடி ஆயுதம் அஸ்திரம் சஸ்திரம்,
திண்டுதற் கரிய ஜெயஜெய மாருதி
ஓம்ஜெய மாருதி, உவந்துடன் வருக!
வருக நகாயுதன்! வருக புயாசலன்!
வருக பராபரன்! வருக கதாகரன்!
பாதுகை சூடும் பரதசத் ருக்னர்,
சீதை இலக்குவன் சேர்ந்துடன் ஆகிய
வருசொல் ஒருவில் ஓர்இல் படைத்த
திருவளர் அந்தணன் ஸ்ரீரகு நந்தனன் -
பின்னணி தாங்கப் பெருமான் அநுமான்
முன்னணி, தாங்கி, முந்துக! முந்துக!
மந்துக, முந்துக, முக்கணன் முந்துக!
முந்துக, வெற்றி முகத்தினன் முந்துக!
வஞ்சம் சூது வதம்பட முந்துக!
தஞ்சம் அடைந்தேன் தாங்கிட முந்துக!

ஐவகை வழிபாடு

சிலையோ, எழுதிய சித்திர வடிவோ,
சுதையோ ஆகுதி சொரியும் அழலோ,
மங்கல விளக்கோ , மந்திர நீரோ,
அங்கம் விளக்கும் அருள்திரு நீரோ,
கருதிய பொருளில், கருதிய வகையில்
கருதுதற் கரிய கடவுள் வருக!
என்மனம், என்சொல், என்கை, என்தொழில்
மன்னவன் உனதே! மாருதி அருளே!
ஆதியில் இலங்கை வீதியில், நவமணி
ஜோதி விரிக்கும் சுவர்கள் கடக்கையல் -
ஒருகால் தங்கம்! ஒருகால் வைரம்!
ஒருகால் பவளம்! ஒருகால் நீலம்!
ஒருகால் செம்மணி! ஒருகால் நித்திலம்!
ஒருகால் பச்சை! உயர்கோ மேதகம் -
வகைவகை யான வண்ணம் காட்டிய
தகையில் எனக்கும் தரிசனம் தருக!
ததும்பத் ததும்பத் தயிலம் பூசுக!
இதயம் குளிர இளநீர் அடுக!
முக்கனிச் சாறும், சர்க்கரை, தேனும்,
பக்குவக் கனியும் பஞ்சாம் ருதமும்,
பாலும், கரும்பும், பன்னீர், சந்தனம்
வாலில் வலியோன் மஞ்சனம் ஆடுக!
கங்கை யமுனை காவிரி வைகை
மங்கல நதிகள் வழங்கிய நீரராய்
இடம்புரி வலம்புரி எழில்மணிச் சங்கிலும்
குடத்திலும் குளிரக் குளிரநீர் ஆடுக!
குழைத்த சந்தனம், குங்குமத் திலகம்
இழைத்தபொன் னாடை இருதோள் மாலை,
நேசர் சூட்டும் நிறைவடை மாலை
வாசகத் துளசி வைஷ்ணவ மாலை
வேண்டுத லோடு வெற்றிலை மாலை
ஆண்டருள் புரிய அர்ச்சனை மாலை,
பந்துபந் தாகப் படைக்கும் வெண்ணைய் -
எந்தை பிரானே; ஏற்றருள் புரிக!
பல்வகைச் சோறும், பல்வகைச் சாறும்,
பல்வகைப் பண்ணிளம், பழமும் கிழங்கும்,
நெஞ்சு நெகிழ்ந்து நிவேதனம் செய்தேன்!
தஞ்சம் புகுந்து தாம்புலம் தந்தேன்!
அனுமந்த ராயா! ஆஞ்ச நேயா
கனிவந்த பார்வைக் கவசம் அருளே!
சிவனும் நீயே! திருமால் நீயே!
தவறு பொறுக்கும் சக்தியும் நீயே!
உவமை இல்லா உன்னதப் பொருளே!
கவசம் கவசம் கவசம் அருளே

காக்க! காக்க!

அரிஓம் சிரசை அனுமன் காக்க!
திருநுதல் அஞ்சனை செல்வன் காக்க!
கண்கள், இமைகள் கதாயுதன் காக்க!
வண்ணச் செவிகள் வரதன் காக்க!
நாசியை, அங்கு நடந்திடும் வாசியைக்
கேசரி மைந்தன் கிரீடி காக்க!
அம்பிகை வாணி அமர்ந்திடும் நாவைக்
கம்பனைக் காத்த கவீந்திரன் காக்க!
உண்ணும் வாயை, உதடுகள் தொண்டை
திண்ணிய பற்கள் ஜெயேந்திரன் காக்க!
காமர் மார்பைக் கழுத்தோடு தோளைப்
பீம சகோதரன் பிராட்டிசெய் காக்க!
பக்கம் விலாவை மாக்கடன் காக்க!
கக்கம், இடுப்பைத் திக்ஜயன் காக்க!
போர்முகம் எதிலும் புறமுது கிடாத
பேர்பெற்ற சூரன் பின்புறம் காக்க!
உந்திச் சுழியைச் சிந்துரன் காக்க
உதரம் வாக்கு மதுரன் காக்க!
பொருப்பிடம் கொண்டோன் இருப்பிடம் காக்க!
அடியார்க் கெளியன் வடிதொடை காக்க!
கருவழி ஜிதேந்த்ரன் கனிவுடன் காக்க!
எருவழி மாருதி இயல்புடன் காக்க!
தினகர சீடன் தீன தயாளன்
வனசரன் கால்களை வலிவுடன் காக்க!
ஊன்றிய பாதம், ஊனிகள் பலவின்
சான்றென நின்ற தத்துவன் காக்க!
அடியேன் உடலம் அணுஅணு வாகப்
படிக நிறத்துப் பண்ணவன் காக்க!
ஈரல், இரைப்பை , இதயம், மூளை,
பாரக் குடல், சிறுநீரகம், சருமம்,
பின்னிய நரம்பு, பெருகிய குருதி,
மன்னிய எலும்பு, வளர்தசை, கொழுப்பென
அகமும் புறமும் அமைந்தபல் உறுப்பும்
தகவுடன் சமய சஞ்சீவி காக்க
ஐவகைப் பொறிகள்! ஐவகைப் புலன்கள்!
ஐவகைக் கோசம்! ஐவகைப் பூதம்!
நாலாம் கரணம்! நவிலும் முக்குணம்!
காலால் ஆழி கடந்தோன் காக்க!
முப்பால் நாடிகள் தப்பா தியங்க
இப்பால் அம்மை அப்பா அருள்க!
செங்கதிர், திங்கள், செவ்வாய், புதனொடு
மங்கல குருவும், வளமார் வெள்ளியும்
அட்டமம் ஏழரை அர்த்தாட் டமம் எனக்
கிட்டிய சனியும், கேதுவும், இராகுவும்
எவ்விதம் கூடினும், எவ்விதம் ஓடினும்,
செவ்விதின் நலனே செய்க அருள்க!
தேங்கமழ் மாலைத் திக்பா லகரும்
ஆங்காங் குறையும் ஆண்பெண் தேவரும் -
படிமேல் உனையே பாரா யணம்செயும்
அடியேன் குடியை அன்புடன் காக்க!
பிரேத, பூத பிசாசுகள் அருகே
வராத வண்ணம் மாருதி காக்க!
காலை, மாலை, கடுநீசி வேளை,
வாடை, கூதல், மழை, பனிகோடை,
பூமி, விசும்பு, புனல், காற்(று) அனல்என
ஆம் இவை யாவினும் அனுமன் காக்க!
ஸ்ரீராம் ஜெயராம் ஸ்ரீஜெய ராம்என
நாமம் உரைத்தேன்! நாடி அழைத்தேன்
சொல்லின் செல்வா! சுந்தர ரூபா!
அல்லல் களையும் அனாத நாதா?
தீர, தீர, தீராதி தீரா!
வீர, வீர வீராதி வீரா!
தேவ, தேவ, தேவாதி தேவா!
வா, வா உடனே வந்தெனைக்காப்பாய்!
தடதட தடெனத் தடைகளைச் சாய்ப்பாய்!
படபட படெனப் பகைவரைத் தீர்ப்பாய்!
வீசிய வாலும், விம்மித முகமும்
காசினி நடுங்கும் கர்ஜனை யோடும்
அஞ்சேல் அஞ்சேல் அஞ்சேல் என்றரு
நெஞ்சில் நினைந்ததும் நேரி லேதோன்(று)!
ஆடிய பாம்பும் அடங்கிட நோக்கு!
நாடிய நலன்கை கூடிட ஆக்கு!
கேளும் நீயே, கிளையும் நீயே!
சூழும் நீயே அரணும் துணையும் நீயே!
நீயே சரணம்! நின்னருள் கவசம்!
தாயாய் எனையும் தாங்குக தினமும்!

அருட்பெரும் கருணை

அடைக்கலம் ஆனால் ஆட்சி கொடுப்பாய்!
படைக்கலம் ஆகிப் பகையை முடிப்பாய்,
ஓதில் உயர்த்தும் தூதுவன் ஆவாய்!
தீது தவிர்ப்பாய்! திருவை வளர்ப்பாய்!
ஆழக்கடலில் அணையும் விளைப்பாய்!
வாழிய எந்த மலையும் சுமப்பாய்!
எத்தனை தடைகள், எத்தனை பகைகள்
எத்தனை எத்தனை எத்தனை குறைகள் -
அத்தனை துயரும் அடிபட் டோட
உத்தம னே நீ உடனே அருளாய்!
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும்,
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும்?
அறியாது செய்த அத்தனை பிழையும்,
அறிந்தும் செய்த ஆகாத பிழையும்!
திருவடி தொழுதேன் ஜெயஜெய மாருதி -
அருள்வடி வாகி அன்புடன் பொறுப்பாய்!
இடமும், வலமும், இரண்டு புறமும்!
கடிமலர் இட்டேன் கவசம் அளிப்பாய்!
திருக்கலை வாணன், தேவி தாசன்!
அருட்கவி இராமன் ஆக்கிய கவசம் -
சிந்தை குவிந்து தினம்தினம் மொழிவோர்!
வந்தனை புரிவோர், மலர்இட்டுத் தொழுவோர்!
எடுத்த பணியை முடித்துத் தருவாய்!
அடுத்து நின்றே அருள்நிதி சொரி வாய்!
கலங்கும் வேளை கைதந்து காவாய்!
குலத்தை விளங்கும் குழந்தைகள் ஈவாய்!
ஆடை, அணிகள், அன்னமும், சொன்னமும்
மேடையும் திருமகள் விலாசமும் அளிப்பாய்!
மண்டலம் ஒன்றில் மைந்தர்க்கு வேலை!
கன்னியர் தமக்குக் கலியாண மாலை!
எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி!
பொங்கும் மங்களம், புகழும் வடிப்பாய்!
வேண்டும் வரன்கள்! வேண்டும் நலன்கள்!
வேண்டும் விதத்தில் யான்டும் படைப்பாய்!

போற்றி! போற்றி!

பராவும் வாயு குமார போற்றி!
இராம தூதா, இணையடி போற்றி!
சஞ்சீவி தந்த சிரஞ்சீவி போற்றி!
தஞ்சம் தஞ்சம் என்சாமியே போற்றி!
போற்றி, போற்றி, பூராண காரண!
போற்றி, போற்றி, பூராண நாரண!
போற்றி, அனுமான்! போற்றிஎம் பெருமான்!
போற்றி மாருதி பொன்னடி போற்றியே!

Comments