சிவ திருவண்ணாமலை சக்தி கவசம் | Siva Tiruvannamalai Shakthi Kavasam

சிவ திருவண்ணாமலை சக்தி கவசம் 


கொள்வோர்க்கு தீமையில்லை, குற்றமில்லை
வாயினால் சொல்வோர்க்கு
வாழ்வில் சுகம்அவை துள்ளி வரும்
சித்தியும் மெய் கூடும்
சிவ திருவண்ணாமலை சக்தி கவசம் தனை

பரணி ஒளி தீபப் பரமசிவனார்
ஹரனின் அடி நெஞ்சே அறி

அருணாசலனே ஆதி சுடரே
அண்ணாமலையின் ஜோதிக் கடலே
கருணாகரனே கருமா மலையே
கார்த்திகை மாதக் கதிரின் விளக்கே

உண்ணாமுலைமார் மங்கை விரும்பும்
உயர்மா சையிலச் சுடரொளி அழகே
விண்ணோர் போற்றும் தேவாதி தேவா
விழிகள் மூன்றால் அழிவை காப்போய்

வெள்ளிப்பனி மா மலையிலமர்ந்த
வேதப் பொருளே விரிசடையானே
மெல்லத் தவழும் நிலவை தலையில் 
நீண்டு அணிந்த சந்திர சிவனே

மங்களம் யாவும் ஒன்றாய் இணைந்த
மாமறை போற்றும் மாமலை ஈசா
கங்குள் பகலென கால மிரண்டை
கண்களில் காட்டும் காடுடையோனே

வேனில் நிலவைச் சூடிக் கொண்டு
வெளியில் உலவிச் செல்லுதல் போலே
வானில் தீயாய் விரியும் போது
மண்ணில் குளிரை பெய்யும் முகிலே

காணா பொருளாய் தோன்றும் பொருளே
காணில் மனதில் நிறையும் அருளே
வீணாய் போகா செய்யா வண்ணம்
வினைகள் அறுக்கும் அருணாசலனே

ஒலியே ஒளியில் உறையும் இருளே
உறையும் இருளின் மூலச்சுடரே
வெளியே வெளியின் துளியே அணுவே
விரியும் கனலே ஞானப் புனலே

ஐந்தென விரியும் பூத பிரிவில்
அழல் உருவாகிய அண்ணாமலையே
பைந்தமிழ் பாடல் அழகும் பேசும்
பரமவடிவமே லிங்க சிலையோ

சோண கிரிக்கு தலைவா வருக
சுந்தர ஜோதி சிவனே வருக
பானம் தொடுத்த மதனை எரித்த
பார்வதி தேவி கணவா வருக

லீலைகள் செய்து புவியைக் காக்கும்
லிங்கோத் பவனே வருக வருக
காலை மாலை எப்போதும் என்
கருத்தினில் வாழும் ஈசா வருக

ஐந்து முகத்துடன் அருளை பொழியும்
அக்னி வடிவமே வருக வருக
ஜவகை தீயின் வண்ணம் கொண்டு
ஆட்சி செலுத்தும் அழகே வருக

கானல் லிங்க குன்றே வருக
கருணை பொங்கிட நன்றே வருக
ஊனம் நீக்கும் தேவா வருக
உயிரை காக்கும் நாதா வருக

கிருதயுகத்தில் தீயாய் நின்ற
கீர்த்திவாசனே வருக வருக
த்ரேதாயுகத்தில் மாணிக்க மலையாய்
திகழ்ந்த அண்ணாமலையே வருக

த்வாபரயுகத்தில் பொன் மலையாகிய
சோணா சலனே வருக வருக
கலியுகத் தினில் கல் மலையாகி
கலிங்கனை போக்கும் கனிவே வருக

வருக வருக மலையோன் வருக
வருக வருக அரவோன் வருக
வருக வருக விடையோன் வருக
வருக வருக சடையோன் வருக

ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ
ஹர சிவ சிவ ஹர ஹர சிவஹரனே
பரவிட பரவிட இனிமை தருமே
பைரவி நாதா உன் திருநாமம்

ஒம் நமசிவாய ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய என்றே ஓத
தாம் எதிர் வந்திடும் பகையும் வினையும்
தாமே ஓடும் அருணாசலனே

அகார உகார மகாரமாகும்
அக்ஷரமாழும் ப்ரணவத் தலைவா
நகார மகார சிகார வகார
யகாரமாகிடும் ஐந்தெழுத்தோனே

சிவ சிவ என்றிட நல்வினை சேரும்
சிவ சிவ என்றிட தீவினை தேயும்
சிவ சிவ என்றிட சிவ கதி கூடும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆகும்

அருட் பெருஞ் ஜோதி ஐயனே வருக
ஆதி நாதனே அவசரம் வருக
அருணாசலனே அவசியம் வருக
அண்ணாமலையே அருகே வருக

டமடமடமடம டமடமடமடம
டம டம டமவென  டமருகம் ஒலிக்க
தகதகதகதக தகதகதகதக
தக தக தகவென தாண்டம் ஆடி

சிவ பெருமானே சீக்கீரம் வருக
சங்கட நாதா சடுதியில் வருக
விரிசடையோனே விரைவாய் வருக
இடைதனில் வருவோய் உடனே வருக

நீல கண்டனே நித்தமும் வருக
நீள் முடியோனே நேராய் வருக
காலக் கண்டனே கனமே வருக
கணலின் நிறைவா காத்திட வருக

பொங்கி ததும்பி புரள துடிக்கும்
புனித கங்கையின் வெள்ளம் தன்னை
தங்கி பிடித்து தரையில் விடுக்கும்
தங்கம் என சுடர் செஞ்சடை அழகும்

ஆதிபதிதனை சோதி முடியினில்
பார்கடல் இருந்து சூடிய அழகும்
நீதி பதியினை போலச் சுடர்ந்து 
மின்னிடும் நெற்றி பகுதியின் அழகும்

நெற்றி பகுதியில் வைர விபூதி
பட்டம் தரித்த பாங்கின் அழகும்
குற்றம் நீக்கி காக்கும் கருணை
கோலம் காட்டும் முகத்தின் அழகும்

சுற்றும் நிலவோ ஒரு விழியாக
சூரியன் காணும் மறு விழியாக
பற்றும் கனலோ நடு விழியாக
பார்வை விதிக்கும் முக்கண் அழகும்

நாக குழைகள் நர்த்தனம் ஆடி 
நன்றாய் புரளும் செவியின் அழகும்
தேகம் முழுதும் சாம்பல் பூசி
தினகர ஒலியாய் திகழும் அழகும்

அரவம் தன்னை அழகிய அணியாய்
அலையச் சூட்டிய தோழின் அழகும்
திருபாற் கடலில் தோன்றிய நஞ்சை
தின்று நிறுத்திய கழுத்தின் அழகும்

திருநடம் செய்ய அபிநயம் காட்டி
தெளிவை காட்டும் திருக்கை அழகும்
கரங்களின் மான் மழு காட்டும் அழகும்

புலியின் தோலை இடையில் துகிலாய் 
போர்த்தி உலா வரும் புதுமை அழகும்
வலிமை கொண்ட காலின் அழகும்
வகை வகையாய் நடம் ஆடும் அழகும்

அங்க மதர்க்குள் மலையை காட்டி
அதிலே அருட்பெருஞ் சுடரைக் காட்டி
அங்கமதில் உண்ண முலையை காட்டி
ஆதிலிங்கமும் அதிலே காட்டி

லிங்கம் தன்னில் உருவை காட்டி
லீலா உருவினில் அறுவைக் காட்டி
எங்கும் விரிந்து பறந்து பறந்து
விம்மி அனலாக மாறும் அழகும்

காணும் போது உள்ளம் சிலிர்க்கும்
கலையா நினைவில் நெஞ்சம் லயிக்கும்
காண காண ஜோதி எழும்பும்
கனமதில் பேரானந்தம் பொங்கும்

அன்றும் இன்றும் என்றும் காணும்
ஆசை தன்னை என்றும் ஊட்டும்
தென்னாடுடைய இறையே அரனே
செஞ்சடையோனே காத்திட வருக

Comments